சிறப்பு ரயிலில் பயணித்த 10 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உத்தரப்பிரதேசத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வீடுகளை அடையும் முன்னரே சாலை விபத்துகளிலும், பசிக் கொடுமையிலும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் பலர் உயிரிழக்கும் அவலநிலை ஏற்பட்டது. இதனையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், ஷ்ரமிக் சிறப்பு ரயில் மூலம் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களின் 10 மாத குழந்தை ரயிலில் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை இறந்துள்ளது. மருத்துவர்களை அழைக்கக் கோரி ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாததால் தான் குழந்தை உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய குழந்தையின் தாத்தா தேவ் லால் “நாங்கள் அலிகர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் ரயில்வே அதிகாரிகளிடம் பேசினோம். ஆனால் அவர்கள் துண்ட்லா ரயில் நிலையத்தில் தான் எங்களுக்கு உதவி கிடைத்தது. மருத்துவரை ஏற்பாடு செய்தனர். அங்குள்ள கொரோனா நோய் சிகிச்சை மையத்தில் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்துவிட்டது” என்று தெரிவித்தார்.