10ம் வகுப்பு தேர்வு பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அரசு, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் பொதுத்தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி, பாதுகாப்பான நிலை உருவான பிறகு பொதுத் தேர்வை நடத்த வேண்டும், மாணவர்கள் உயிருடன் விளையாடி தேர்வை நடத்த வேண்டாம் என்றும் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு பொறுப்பாளரான தேர்வுத் துறை இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தர்மபுரியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார். இதனால் தேர்வுத்துறையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வுத்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், தேர்வு நடத்துவதை விட, மாணவர்களின் உயிரைக் கருத்தில் கொண்டு, தேர்வை அரசு தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.