திருச்சி மணப்பாறை அருகே பாலியல் தொல்லை அளித்து 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 14 வயது பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், கிருஷ்ண சமுத்திரம் மேல் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மகள் கிருத்திகா. அருகே உள்ள வீ.பூசாரிபட்டி அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பூ தோட்டத்தில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிருத்திகா உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.
இதனை அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் கூறியதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அப்போது, மோப்ப நாய் கரை படிந்து கிடந்த உடையின் அருகே சென்று நின்றுள்ளது. அந்த உடை யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தியபோது கிருத்திகாவை முதலில் பார்த்த சிறுவன் உடை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, சிறுமியின் தலையில் கல்லால் பயங்கரமா தாக்கப்பட்டது தெரியவந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, போலீசார் விசாரணையில் கிருத்திகாவை ரத்த வெள்ளத்தில் கண்டதாக கூறிய அந்த சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், அப்போது சத்தம் போட்டதால் சிறுமியை கல்லால் தாக்கியதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.