
சென்னை: தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த மே 27 ஆம் தேதி தொடங்கின. கொரோனா தீவிரமாக பரவிவந்ததன் காரணமாக விடைத்தாள் திருத்துவதற்காக வரும் ஆசிரியர்களின் நலனை கருதியும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என தமிழகம் முழுவதும் 202 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றுவந்தன.
இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுற்று தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தயாராகி வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்றுவருகிறது என குறிப்பிட்ட அமைச்சர், கொரோனா பாதிப்பின் காரணமாக புத்தகங்களை அச்சடிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.