காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் குல்காம் நகரில் ஆரே என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ரைபிள் படை பிரிவினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் நேற்று கூட்டாக இணைந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்பின்னர் தீவிரவாதிகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில், பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்த தொடங்கினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து கொல்லப்பட்ட தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்தது. அதில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஹிஸ்புல் முஹாஜிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என உறுதியானது. தொடர்ந்து, அவர்களின் உடல்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை காஷ்மீர் போலீசார் உறுதி செய்துள்ளனர்