சென்னையில் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த 236 பேர் விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக ஆய்வு குழுவினர் தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

சென்னையில் நேற்று முன்தினம் வரை 1033 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 20 முதல் 30 பேர் சென்னையில் மரணம் அடைகின்றனர். இந்நிலையில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 300க்கும் மேற்பட்டோர் குறித்த விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருந்து இறந்தவர்களின் விபரங்களை மாநகராட்சி மறைத்துள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து ஆராய பொது சுகாதாரத்துறையின் கூடுதல் இயக்குனர் வடிவேலன் தலைமையில் மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஆய்வு நடத்தி முதற்கட்ட அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர்.அதில், கொரோனா இறப்பு கொரோனா அறிகுறியுடன் இறந்த 236 பேர் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா இறப்பு பதிவில் இல்லாத 236 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சந்தேக மரண பட்டியலில் உள்ளனர். ஆய்வறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின் வெளியிடப்படும், என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வு குழுவினர் கூறுகையில் ‘அரசிடம் முதற்கட்ட ஆய்வறிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் மருத்துவ அறிக்கை ஆராயப்பட்டு வருகிறது. அவர்கள் கொரோனாவால் இறந்தார்களா என்பது உறுதி செய்யப்பட்டு ஓரிரு நாளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்துள்ளனர்.