தமிழகத்தில் நேற்று முதல் கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. அதன்படி கடந்த மாதம் முதல், குறிப்பிட்ட அளவிலான ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜுன் 1-ம் தேதி முதல், 4 வழித்தடங்களில் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் 3 கூடுதல் சிறப்பு இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், நேற்று முதல் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. திருச்சி – செங்கல்பட்டு இடையே 2 ரயில்கள், அரக்கோணம் – கோவை இடையே 1 ரயில் என மொத்தம் 3 ரயில்கள் இயக்கப்படுகிறது.

அரக்கோணத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 2 மணியளவில் கோவை சென்றடையும். பின்னர் அதே ரயில், மறு மார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்படும் இரவு 10 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், 11 மணிக்கு செங்கல்பட்டு சென்று சேரும். திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குக் புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் 11.30 செங்கல்பட்டு சென்றடையும்.
ரயில் நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ரயில் பயணிகள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.