ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இருந்து தப்பிய 3 வயது குழந்தை தனது தாத்தாவின் உடலுக்கு அருகே கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் இன்று காலை சிஆர்பிஎஃப் வீரர்கள் வழக்கமான ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்த்னர். ஸ்ரீநகர் காவல்நிலையத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் தீவிரவாதிகள், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஒரு சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்தார்.
இந்த தீவிரவாத தாக்குதலில், தனது குழந்தைகளுடன் காரில் இருந்த பொதுமக்கள் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தனது தாத்தவின் உடலுக்கு அருகில் அமர்ந்திருந்த 3 வயது குழந்தையை காஷ்மீர் போலீஸ் மீட்டுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். தனது தாத்தாவின் உடலுக்கு அருகில் குழந்தை அமர்ந்து அழும் காட்சி மனதை கலங்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது. பயத்துடன் அமர்ந்திருந்த குழந்தையை காவல்துறையினர் பத்திரமாக மீட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து அக்குழந்தை தாயிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகருக்கு தனது தாத்தாவுடன் குழந்தை மாருதி காரில் சென்று கொண்டிருந்த போது தான், தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மசூதிக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் பேருந்தில் இருந்து இறங்கிய போது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிஆர்பிஎஃப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர் என்றும், ஆனால் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த மற்ற சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.