சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தபட்டது. அதைதொடர்ந்து தற்போது, 5ம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என மருத்துவர் நிபுணர் குழு வலியுறுத்தியது. இதைதொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கும். மளிகை கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 12 நாட்களில் வரக்கூடிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், 4 மாவட்டங்களை சேர்ந்த ரேசன் அட்டைதாரர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பிற்கும் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடையில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம் எனவும், கட்டுப்படுத்த பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிக்கு வர தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைக்கு மட்டுமே ஆட்டோ, டாக்சி இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டீ கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கு மட்டும் உரிய ஆவணங்களை சமர்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் எனவும், கட்டுப்படுத்தபட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.