
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக ஜூலை 15 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காலக்கட்டத்தில், மின் கணக்கிடும் பணிகள் நடைபெறாமல் பழைய மின்கட்டணத்தினை செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மின்கட்டணத்தினை மக்கள் செலுத்தியிருந்தனர். ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து இல்லங்களிலும் மின் கணக்கீடு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் மின்வாரியம் அளவுக்கு அதிகமாக மின்கட்டணங்களை கட்டச்சொல்வதாகவும், பகல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களுக்கும் மின்கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கமுடியாது எனவும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமையன்று பதில் தெரிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதற்குள் தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு ஜூன் 30 வரை அமலில் இருப்பதால் அந்த மாவட்ட மக்கள் மட்டும் ஜூலை 15 ஆம் தேதி வரை மின்கட்டணத்தினை செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதுவரை மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.