10-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளதால் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை பொறுத்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசின் ஆல்பாஸ் அறிவிப்பில் குழ்பபம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.