இந்தியாவில் ஒரே நாளில் 507 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 17,400-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்பிறகு 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. அன்லாக் 1.0 என்ற பெயரில் ஊரடங்கு தளர்வுகள, கடந்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. எனவே கடந்த மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 3.94 லட்சம் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் புதிதாக 18,653 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,85,493-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா காரணமாக 507 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 17,400-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,20114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3,47,978 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

முன்னதாக நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றி மோடி, சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவாக உள்ளதாக கூறிய அவர், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனாவை நமது நாடு சிறப்பாக எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 507 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.