இங்கிலாந்தை சேர்ந்த 62 வயது மூதாட்டியை, துனிசியாவை சேர்ந்த 26 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சேர்ந்த இசபெல் டிப்பில் என்பவருக்கும், துனிசியாவை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் பேராமுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் நண்பர்களான இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. முன்னதாக இசபெல்லுக்கு இதுவரை மூன்று முறை திருமணமான நிலையில் கணவன்கள் இறந்துள்ளனர். தற்போது அவர் தனது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இசபெல் தனது குடும்பத்தினருடன் துனிசியா சென்ற போது பேராம் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். முதலில் வயது வித்தியாசம் தொடர்பாக யோசித்த இசபெல், இறுதியில் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் இருவரும் அவரவர் சொந்த நாட்டில் இருக்கின்றனர். விமான சேவைகள் தொடங்கிய பிறகு பேராம் தன்னைக் காண இங்கிலாந்து வந்துவிடுவார் என இசபெல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தங்களது காதலுக்கு வயது தடையாக இருக்கவில்லை என்றும், பேராம் தன்னிடம் இருந்து எந்த பண உதவியும் எதிர்பார்க்கவில்லை என்றும் இசபெல் கூறியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டதாகவும், தற்போது தன்னுடைய வாழ்வில் அப்படி ஒரு திருமணம் நடந்துள்ளதாகவும் இசபெல் தெரிவித்துள்ளார். தான் இசபெல்லை வயதான பெண்ணாக பார்க்கவில்லை என்றும், நல்ல குணம் உள்ள ஒரு பெண்ணாக மட்டுமே பார்ப்பதாக பேராம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளோம். கொரானா பாதிப்பால் எங்களால் சந்திக்க முடியவில்லை. ஆனால் எனது மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். என்னுடைய அழகான மனைவியை நான் அதிகம் நேசிக்கிறேன்’என கூறியுள்ளார்.
இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பேராம் மற்றும் இசபெல் தம்பதிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்