சென்னையில் 97 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற பாதிப்பு கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும் வகையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதியவர்கள் இறப்பு விகிதம் அதிகமாக பதிவானது. எனினும் பல நாடுகளில் 100 வயதை கடந்த முதியவர்கள் பலர், இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

அந்தவகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. வயது முதிர்வு காரணமாக, ஏற்கெனவே அவருக்கு உயர் ரத்த அழுத்தம், இதயப் பாதிப்பு போன்ற உடல்நல பிரச்சனைகளும் இருந்தன.
இதனால், அவருக்குச் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நிலை சீராக தொடங்கியது. இதன் காரணமாக அவர் தற்போது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
எனினும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை கைத்தட்டி உற்சாகப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.