திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் இருந்து 145 கி.மீ தொலைவில் உள்ள இடம் உனக்கோடி. இந்த 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 கற்சிலைகள் உள்ளன. ஆனால் இந்த சிலைகள் குறித்த மர்மமும், ரகசியமும் இன்று வரை தீர்க்கப்படாமல் தொடர்கிறது. இந்த சிலைகளை யார், எப்போது செதுக்கியது..? ஏன் அவை ஒரு கோடிக்கும் ஒரு சிலை மட்டும் குறைவாக உள்ளது என பல கேள்விகள் உள்ளன. எனினும் இவை குறித்து பல கதைகள் கூறப்படுகின்றன.
இந்த மர்மமான கற்சிலைகள் காரணமாகவே இப்பகுதிக்கு உனகோடி என்று அழைக்கப்படுகிறது உனகோடி என்றால் ஒரு கோடிக்கு ஒன்று குறைவு என்று பொருள். வடகிழக்கு இந்தியாவின் மர்மமான இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த இடத்தின் ரகசியம் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

ஒருசிலருக்கு மட்டும் இந்த உனகோடியின் ரகசியம் தெரிந்திருப்பதால், இந்து மர்ம பூமியாக பார்க்கப்படுகிறது. மலைப்பகுதியான உனகோடியை சுற்றிலும், அடர்ந்த காடுகளும், சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன. எப்படி இந்த காட்டிற்கு நடுவே லட்சக்கணக்கான சிலைகள் செதுக்கப்பட்டன என்பதும், புரியாத புதிராகவே உள்ளது.
கற்களில் செதுக்கப்பட்ட இந்த சிலைகள் குறித்து ஒரு புராணக் கதைகளும் கூறப்படுகிறது. சிவபெருமான் உள்ளிட்ட ஒரு கோடி தெய்வங்கள் பயணம் மேற்கொண்டிருந்த போது, உனகோட்டிக்கு வந்தவுடன், மற்ற தெய்வங்கள் இரவாகிவிட்டதால் இங்கேயே தங்கி, ஓய்வெடுத்து செல்லலாம் என்று சிவபெருமானிடம் கூறினார்கள். அதற்கு சிவபெருமான சம்மதம் தெரிவித்தாலும், ஒரு நிபந்தனையும் விதித்தாராம்.

சூரிய உதயத்திற்கு முன்பே அங்கிருந்து அனைவரும் புறப்பட வேண்டும் என்பதே சிவனின் உத்தரவு. ஆனால் சிவபெருமான் மட்டுமே சூரிய உதயத்தின் போது விழித்திருக்க, மற்ற தெய்வங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனராம். இதனால் கோபமடைந்த சிவபெருமான், ஒவ்வொருவரும் கல்லாக மாறுங்கள் என்று சாபம் விட்டுவிட்டாராம். அதனால் தான் அங்கு சிவபெருமானை தவிர 99 லட்சத்து 99 ஆயிரத்து 999 சிலைகள் உள்ளன என்று கூறப்படுகிறது.
இந்த சிலைகள் தொடர்பாக மற்றொரு கதையும் கூறப்படுகிறது. கலு என்ற சிற்பி கைலாசத்திற்கு சென்று சிவபெருமான் மற்று பார்வதியுடன் இருக்க விரும்பினாராம். தனது ஆசையை அவர் சிவபெருமானிடம் தெரிவித்த போது, ஒரே இரவில் ஒரு கோடி சிலைகளை செய்தால் தன்னோடு கைலாசத்திற்கு அழைத்து செல்வதாக சிவபெருமான உறுதி அளித்தாராம்.

இதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்ட அந்த சிற்பி, ஒவ்வொரு சிலையாக செதுக்க தொடங்கினாராம். அனைத்து சிலைகளையும் செதுக்கிவிட்டு, காலையில் அவற்றை எண்ணிப்பார்த்த போது ஒரு கோடிக்கு ஒரு சிலை குறைவாக இருந்தது. இதனால் அந்த சிற்பியை சிவன் தன்னோடு அழைத்து செல்லவில்லையாம். இதன் காரணமாக அந்த இடத்திற்கு உனகோடி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.