மதுரையை அடுத்த பசுமலையை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் செல்போனில் பிரீ பயர் என்னும் ஆன்லைன் விளையாட்டை எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பார். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டம் புதிய ரயில்வே காலனியை சேர்ந்த செல்வா(21) என்பவருடன் சிறுமிக்கு பிரீபயர் விளையாட்டின் மூலம் பழக்கம் உண்டானது. இவர்கள் இருவரும் பிரீபயர் ஆன்லைன் விளையாட்டை சேர்ந்து விளையாடி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக இரண்டு பேரும் வாட்ஸ்-அப் மற்றும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கும், செல்வாவுக்கும் காதல் உண்டானது. இந்தநிலையில் செல்வா அந்த சிறுமியிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், எனவே வீட்டை விட்டு வெளியேறி என்னுடன் வந்து விடு என்று கூறியுள்ளார். செல்வாவின் ஆசைவார்த்தைக்கு மயங்கிய சிறுமி, வீட்டை விட்டு வந்து விடுவதாக கூறியுள்ளார்.
இதனால் மதுரைக்கு வந்த செல்வா, சிறுமியை பார்த்து மராட்டிய மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் மகளை காணவில்லை என்று பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனவே புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவர் மராட்டிய மாநிலம் ராய்கட்டில் இருப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர். சிறுமியை தேடி காவல்துறையினர் வருவதை அறிந்த செல்வா, புனே ரெயில் நிலையத்தில் அந்த சிறுமியை விட்டு விட்டு தப்பிச்சென்றார்.
காவல்துறையினர், அந்த சிறுமியை திருப்பரங்குன்றத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மராட்டிய மாநிலம் ராய்கட் பகுதியில் பதுங்கி இருந்த செல்வாைவை, திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுந்தரி தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். செல்வாவின் தந்தைக்கு கடலூர் மாவட்டம் டி.புடையூர் சொந்த ஊராகும். இதனால் செல்வா தமிழ்நன்றாக பேசுவார். இதை வைத்து பிரீபயர் விளையாட்டின் மூலம் சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்தி, மராட்டிய மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. கைதான செல்வாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.