விழுப்புரம் மாவட்டம் டி எடையார் கிராமத்தில் குடியிருக்கும் முனுசாமி என்பவரின் மகன் அருண் 21 இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இந்நிலையில் அருணின் பைக்கை, அதே பகுதியைச் சேர்ந்த சரத் (20), சத்யன் (17), வீரமணி (18) கீர்த்தி (18) இந்த இந்த நான்கு பேரும் சேர்ந்து திருடியுள்ளனர். மேலும் இவர்கள் பைக் திருடர்கள் என்பதோடு கஞ்சா விற்பனையும் செய்து வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் அருண் அவரது பைக் திருட்டு சம்பந்தமாக அந்த நான்கு பேரிடமும் வாக்குமூலத்தை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் தனது பைக்கை தரவில்லை என்றால், இந்த வீடியோவை காவல் நிலையத்தில் கொடுத்து விடுவேன் என கூறியுள்ளார்.
இதனால் அந்த நால்வரும் நேற்றிரவு அருணிடம் உனது பைக்கை தருகிறோம் வா என அழைத்துச் சென்று, அருணை அடித்து கொலை செய்துள்ளனர். பிறகு அருகில் உள்ள பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளனர். இதை தொடர்ந்து கிராமத்திற்கு வந்த சத்தியன் போதையில் இதைப் பற்றி உளறி உள்ளார். கிராம மக்கள் ஒன்று திரண்டு அனைவரையும் பிடித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்துள்ளனர். இதை தொடர்ந்து கிணற்றிலிருந்து அருணின் உடலை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர், மீட்டு கூடற்கூறு ஆய்விற்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அருணின் உறவினர்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.