தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பின் கடந்த 18ஆம் தேதி மீண்டும் வீடு திரும்பினார். இதையடுத்து, அவர் இன்று முதல் அலுவல் பணிகளையும் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். இதேபோல், பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.