கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் பொதுமக்கள் வீசி செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்ததை அடுத்து, கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி, பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த வாகனங்கள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீவைத்தும் கொளுத்தினர். இதனால், பள்ளி வளாகமே தீக்கிரையானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் இருந்த மேசைகள், டேபிள், மின்விசிறி, கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துச் சென்றனர். தற்போது, அந்த பொருட்களை திரும்பப் பள்ளி வளாகத்தில் வைக்குமாறு காவல்துறை சார்பில் தண்டோரா மூலம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பொதுமக்கள் இரவோடு இரவாக சாலையோரமாக வீசி சென்றுள்ளனர். மேலும் கலவரத்தின் போது வேடிக்கை பார்க்க சென்ற நபர்கள் கொண்டு சென்ற நகைகள், சின்னசேலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், சாலையோரமாக வீசி சென்ற பொருட்களை மீட்ட காவல்துறையினர், கும்பக்கொட்டாய் மாரியம்மன் கோயில் வளாகத்தில் கொண்டு சென்று வைத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்திப்பட்டுள்ளனர். மேலும், பள்ளியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட பொருட்கள் அனைத்தும் காவல்துறையினரின் கையில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.