சென்னை, கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்ததால் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும் விதமாக கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை 134 அடி உயரத்திற்கு பிரமாண்டமான சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஒப்புதல் அளித்ததால் பேனா நினைவு சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரும் நடைமுறைகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டு குழுவிற்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து நேரடியாக கடலுக்குள் கண்ணடிப்பாலம் அமைத்து அதன் வழியாக நடந்து செல்லும் வகையிலான திட்டத்தின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.