காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும், ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்ஃபி எடுக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.