பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கும் மேலாக நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் செய்ததை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். விடுதலை தொடர்பாக விசாரணை நடந்து முடியும் வரை இடைக்காலமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் நளினி தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி நளினி மனு தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நளினியும் மனு தாக்கல் செய்திருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது