மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னை மக்களிடம் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 500 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவுக்கு மின் கட்டணம் உயர உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் 16ஆம் தேதியும், மதுரையில் 18ஆம் தேதியும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.