வடமதுரை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மனைவி அனுப்பிய புகைப்படத்தால், அதிர்ச்சியடைந்த முதல் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகில் உள்ள ஏட்டிககுளத்துபட்டியில் வசிப்பவர் ஆனந்த் (30). தனியார் சோலார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாடியவரை சேர்ந்த வீரழகு (25) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர் மனைவி தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்த சூழ்நிலையில் ஆனந்த் வாட்ஸ் அப்பிற்கு அவரது மனைவி ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார். வீரழகு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்துடன், என்னை இனிமேல் தேடி வர வேண்டாம், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என அவரது மனைவி கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீரழகு இருக்கும் இடம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.