உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் மணல் கடத்தல் கும்பல் செய்த ஒரு சம்பவம் நிர்வாகத்தையும், போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள், சுங்கச்சாவடியில் உள்ள தடுப்பை இடித்துவிட்டு நிற்காமல் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மணல் கொள்ளை மாபியாவுக்கு சொந்தமான 13 டிராக்டர்கள் மணல் ஏற்றிக்கொண்டு ஆக்ராவில் இருக்கும் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நிற்காமல் சென்றன. ஆக்ரா நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள் முதலாவதாக சென்ற டிராக்டர் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு நிற்காமல் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஆக்ராவில் இருக்கும் சுங்கச்சாவடியில், நேற்று அதிகாலை 5 மணியளவில், அதிவேகமாக மணல் ஏற்றிக் கொண்டு டிராக்டர்கள் வந்தன. அவற்றை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்த முயன்ற போது, நிற்காமல் வேகமாக சென்ற டிராக்டர்கள், தடுப்பை இடித்துவிட்டு சென்றன. அதை தொடர்ந்து 53 நொடிகளில் 13 டிராக்டர்கள் மணலை கடத்திக் கொண்டு, நிற்காமல் சென்றது சட்டவிரோதமாக மணல் திருடி சுங்கச்சாவடியை உடைத்துக்கொண்டு வெளியேறிய டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.