பாகிஸ்தானில் கனமழை, வெள்ள பாதிப்பு பிரச்சினைகளுக்கு நடுவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தி சிங்கப்பூர் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ள பாதிப்பினால் சீரழிந்து போயிருக்கும் அந்த நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று ஒரு அறையில் பல நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சமூக ஊடகத்தில் வீடியோ பரவியதை தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டனர். மேலும் குற்றவாளிகளை தேடும் வேலையில் முடுக்கி விடப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. நாடே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அந்த நாட்டில் சிறுமிகள் கடத்தல், பலாத்காரம் போன்ற வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்து வரும் பருவக மழை பாதிப்புகளால் பெருவெள்ளம் ஏற்பட்டு அந்தநாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத வெள்ள பாதிப்புகளால் மூன்றில் ஒரு பங்கு நாடு நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள நீரில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களும், கால்நடைகளும் அடித்து செல்லப்பட்டுள்ளன. உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 400 பேர் குழந்தைகள்.