தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து கோலிவுட்-பாலிவுட்-ஹாலிவுட் வரை ஆகச்சிறந்த நடிகராக தடம் பதித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டில் (2022) மாறன், The Grey Man மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய 3 திரைப்படங்களில் இதுவரை வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் 4-வது திரைப்படமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ’நானே வருவேன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. தொடர்ந்து 5-வது திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள ’வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் புதிய திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனி கவனம் பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். 1930களின் காலக்கட்டத்தை கொண்ட பீரியட் படமாக தயாராகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷுடன் இணைந்து நடிகர் சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் கதாநாயகியாக, நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.