லக்சரி பட்ஜெட் டாஸ்கிற்கான போட்டியை விளையாடும் போது, அடிப்பட்டு ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக, லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை குழுவாக சேர்ந்து விளையாடுவர். ஆனால், இம்முறை இந்த லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்குகளை தனிநபராக விளையாட வேண்டும் என்ற புது விதிமுறை உண்டாகியுள்ளது.
அப்படியாக, இந்த டாஸ்கில், பிக்பாஸ் வீட்டில் திடீர் சத்தம் ஒன்று எழுப்பப்படும். அந்த சத்தமானது ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதை நிறுத்த வீட்டின் ஏதோ ஒரு இடத்தில் பஸ்சர் ஒன்று இருக்கும். அதை அழுத்தினால் சத்தம் நின்று விடும். எந்த போட்டியாளர் முதலில் சென்று அந்த பஸ்சரை அழுத்தி சத்தத்தை நிறுத்துகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். சத்தம் ஒலிக்கும் வரை, மேற்கூரையில் இருந்து குப்பை கொட்டி கொண்டிருக்கும். அதையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் சுத்தம் செய்ய வேண்டும். குப்பையை அகற்றி வீட்டை சுத்தம் செய்வதும் ஒரு டாஸ்காகும்.
இந்த போட்டியில், அனைவரும் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில், முதன் முதலாக மகேஸ்வரி பஸ்சரை அடித்து வெற்றியாளர் ஆனார். அதற்கு அடுத்து அமுதவானன் பஸ்சர் அடித்தார். இப்படி இந்த டாஸ்க் தொடர்ந்த நிலையில், ஆர்வமாக ஓடிச்சென்ற மகேஸ்வரிக்கு நெற்றியில் ரத்தம் வரும் அளவிற்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. இவர், வேகமாக பஸ்சரை அடிக்கச் சென்ற போது சக போட்டியாளர்களும் இவருடன் ஓடிச்செல்ல மோதல் ஏற்பட்டு, ரத்தகாயத்திற்கு ஆளாகியுள்ளார் பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரி.