கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது.
என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் நேரில் வந்து பார்த்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பின்னர், சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் செல்போனுக்கு இளம்பெண் ஒருவரிடம் இருந்து வீடியோ கால் வந்தது.
அதை ஆன் செய்து பார்த்தவுடன் அங்கே ஒரு பெண் ஆபாசமாக நின்றுள்ளார். உடனடியாக அவர் இணைப்பை துண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவருக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை திறந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட வாலிபர் அரை நிர்வாணமாக இருப்பது போல அவரது புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு கால் வந்து அதிலிருந்து பேசிய நபர், “50,000 பணத்தை கொடுத்தால் இந்த புகைப்படத்தை யாருக்கும் அனுப்பாமல் டெலிட் செய்து விடுவேன்.” என்று மிரட்டியுள்ளார்.
ஆனால், வாலிபர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு இணைப்பைத் துண்டித்தார். இதுபோல ஏற்கனவே அவரது நண்பர்களை ஏமாற்றி இந்த கும்பல் பணம் பறித்ததை அறிந்த அவர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை தேடி வருகின்றது.