ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்த தடயவியல் ஆய்வக அதிகாரி மீது வெர்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வசிக்கும் வேத் பிரகாஷ் சோனி என்பவர், கோவா மாநிலம் வெர்னாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஹரியானாவை சேர்ந்த 31 வயது பெண்ணுடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் நட்பை ஏற்படுத்தி காதலித்து வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளனர். தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அவரை வேத் பிரகாஷ் சோனி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது காதலி வலியுறுத்தியும், வேத் பிரகாஷ் சோனி சாக்குபோக்கு காரணங்களை கூறி அவரை தவிர்த்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வெர்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், வேத் பிரகாஷ் சோனி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354-ஏ, 376, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.