தீபாவளிக்கு அடுத்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தீபாவளிக்கு அடுத்த நாள் வேலை நாளாக இருப்பதால், தீபாவளி அன்றிரவே வசிக்கும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சொந்த ஊருக்குச் சென்ற மக்கள் மனத்திருப்தியுடன் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுரிகளுக்கு வரும் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு, வியாழக்கிழமை (04.11.2022) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்குச் செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமையை விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தது.
எனவே, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கலாம் என்றும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வேறொரு வார விடுமுறையை பணி நாளாக அறிவிக்கலாம் என்றும் பெற்றோர்கள் கருதுகின்றனர்.