கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை கத்தியால் கீறி, கறி மசாலா தடவி அவர் துடிப்பதை பார்த்து ரசித்த கொடூர சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தருமபுரி பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடி பகுதியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா மற்றும் ஷாபி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். இந்த விசாரணையில், நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஒரு பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற பிறகு, உடலை துண்டு, துண்டாக வெட்டியதாக அவர்கள் கூறினாலும் அதை போலீசார் நம்பவில்லை. ஆனால், மற்றொரு பெண்ணை உயிருடன் துடிக்கத் துடிக்க 3 பேரும் சேர்ந்து கொடூரமாக துண்டுகளாக்கியதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த பெண்ணின் பிறப்புறுப்பிலும் கத்தியால் குத்தி கிழித்து ரசித்துள்ளனர். இந்த விவரங்களை 3 பேரும் ஏற்கனவே போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலும் ஒரு கொடூர செயலை பகவல் சிங் கும்பல் நடத்தியுள்ளது. அதன்படி, நரபலி கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல் முழுவதும் 3 பேரும் சேர்ந்து கத்தியால் கீறி, காயங்களில் கறி மசாலா தடவி உள்ளனர். அப்போது அந்த பெண் வேதனையில் அலறித்துடிப்பதை பார்த்து அவர்கள் ரசித்து உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி துடிக்கத் துடிக்க இறந்தால் தான் நரபலியின் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் என்று ஷாபி தங்களிடம் கூறியதாக பகவல் சிங்கும், லைலாவும் போலீசிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பகவல் சிங், லைலாவின் சொத்துக்களை அபகரிக்கவும் ஷாபி திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஸ்ரீதேவி என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி தான் பகவல் சிங்கை ஷாபி ஏமாற்றினார். அதேபோல வேறு ஒரு போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தை கூறி மிரட்டி 2 பேரின் சொத்துக்களையும் பறிக்க ஷாபி திட்டமிட்டிருந்தாராம். இதற்கிடையே ஷாபி, பகவல் சிங் ஆகியோர் மீது இரட்டை கொலை வழக்குடன், பலாத்காரம், நகை பறிப்பு வழக்கையும் பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
பலாத்கார வழக்குப்பதிவு செய்வதற்காக 2 பேருக்கும் எர்ணாகுளம் மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. பத்மாவின் உடலில் இருந்து எடுத்த 39 கிராம் நகைகளை அடகு வைத்துள்ள எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு ஷாபியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை அங்கிருந்த ஊழியர்கள் அடையாளம் காண்பித்தனர். மீட்கப்பட்ட நகைகள் பத்மாவுக்கு சொந்தமானது தான் என்று அவரது மகனும், தங்கையும் உறுதி செய்தனர். பகவல் சிங்கின் வீட்டில் இருந்து கூடுதலாக உடல்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஷாபியின் தலைமையில் மேலும் சில பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் உறுதியாக நம்புகின்றனர். இதனால், கடந்த சில வருடங்களில் எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.