காதலில் ஆணும் பெண்ணும் ஒருவொருக்கு ஒருவர் புரிந்து, பேசி, பழகி அதனை திருமணம் என்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதுண்டு. சில நேரங்களில் இந்த காதல் பயணம் பாதி வழியில் நின்று திருமணம் தடைபடுவதும் உண்டு. காதல் தோல்விக்கு பின்பான காலகட்டத்தில் ஆணோ, பெண்ணோ தங்களை எல்லா வழிகளிலும் வருத்திக் கொண்டு காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருவதை பரவலாக காண முடியும். த்ரிஷா, விஜய் சேதுபதி நடித்த ’96’ படத்தில் உள்ள ‘அந்தாதி’ பாடலின் இறுதியில் நடிகர் நாசரின் குரலில் ஒரு வசனம் இடம்பெறும்..
காதல் பிரிந்தால் என்ன செய்வது என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதலர்கள் கேட்கத்தான் செய்வார்கள். ஒன்னும் செய்ய வேண்டாம் ஒரு இன்சூரன்ஸ் போடு என கூலாக ட்வீட் பதிவு செய்துள்ளார் ஒரு நபர். அதற்கு ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் என்று பெயரும் வைத்துள்ளார். பிரதீக் ஆர்யன் எனும் ட்விட்டர் பயனாளரும் அவரது காதலியும் காதலிக்கும் போது வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் மாதம் தோறும் ரூ.500 செலுத்தி அதற்கு ‘ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்’ என பெயரிட்டு டெபாசிட் செய்து வந்தனர். இந்த வைப்பு நிதி எதற்கு எனில் காதலில் முதலில் யார் ஏமாற்றப்படுகிறாரோ அவருக்கு வங்கியில் மாதமாதம் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் வட்டியோடு எடுத்துக் கொள்ளலாம்.
இது குறித்து ஆர்யன் தனது ட்விட்டரில் தெரிவிக்கையில், ‘என் காதலி என்னை ஏமாற்றியதால் எனக்கு ரூ.25,000 கிடைத்துள்ளது. நாங்கள் காதலிக்க தொடங்கியதும் இருவரும் சேர்ந்து வங்கிக் கணக்கு தொடங்கி அதில் மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்தோம். யார் ஒருவரை ஏமாற்றினாலும் அவர் இந்த கணக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்று பாலிசி செய்து கொண்டோம். எனது காதலி ஏமாற்றியதால் முழு பணமும் எனக்கு கிடைத்துள்ளது. இதுதான் ‘ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் (HIF)’ என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் பரவலாக பகிரப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.