இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதிகள் அதிகம் என்பதால் மக்கள் ரயிலையே விரும்புகின்றனர். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் சற்று சிரமத்தை அனுபவிப்பார்கள். டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விவரங்களை விண்ணப்பத்தில் டைப்பிங் மூலமாக நிரப்ப வேண்டும். இதனால் சற்று காலதாமதம் ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது வாய்ஸ் மெசேஜ் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ஆஸ்க் திஷா 2.0-வில் பல முக்கிய மாற்றங்களை ஐஆர்சிடிசி கொண்டுவர இருக்கிறது. குரல் கட்டளையின் விருப்பம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி தற்போது சோதனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிவடைந்த பிறகு விரைவில் குரல் கட்டளையின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளை தேர்ந்தெடுக்கலாம். மேலும் அதோடு டிக்கெட்டின் பிரிவியூ, பிரிண்ட், ஷேர் விருப்பம் போன்றவைகளும் கிடைக்கும்.