நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. நோய் தொற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா பாதிப்பை சமாளிக்க தங்கள் தயார்நிலையை மறுபரிசீலனை செய்ய இரண்டு நாள் ஒத்திகையை தொடங்கி உள்ளன..
இந்த நிலையில் பல மாநிலங்கள் வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களை எச்சரித்துள்ளன.. அந்த வகையில் பொது இடங்களில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. கோவிட் விதிகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில் எந்தெந்த மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம்..
ஹரியானா: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹரியானாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு மேல் கூடும் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மும்பை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் நபர்கள் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
டெல்லி: டெல்லியில், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், பொது இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியின் அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கருத்தில் கொண்டு, வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு திகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
கேரளா: கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய்கள் உள்ளவர்கள் ஆகியோருக்கு கேரள அரசு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
ராஜஸ்தான்: கொரோனா அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில மருத்துவக் கல்வி செயலாளர் டி ரவிகாந்த் அறிவுறுத்தியுள்ளார். சேகரிக்கப்பட்ட மாதிரிகளை விரைவில் பரிசோதனைக்காக அனுப்பவும், பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளின்படி சிகிச்சையை உறுதிப்படுத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்…
புதுச்சேரி: வரும் நாட்களில் கொரோனா பரவும் அபாயத்தைக் குறைக்கும் வகையில் புதுச்சேரியில் பொது இடங்கள், கடற்கரை சாலைகள், பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.