இந்த வருடத்திற்கு நீங்கள் வேலைக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஒரு நாள் கூட வர தேவையில்லை. ஆனால், உங்கள் சம்பளம் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் என்று உங்கள் நிறுவனம் உங்களுக்குச் சொன்னால் என்ன செய்வீர்கள்? பலருக்கு அது கனவு. ஆனால், சீனாவில் அது நனவாகியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு இரவு விருந்து அளித்துள்ளது. கொரோனா தொற்றுக்குப் பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஊழியர் ஒருவருக்கு சம்பளத்துடன் கூடிய, 365 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் விடுபடும் வகையில், நிறுவனம் ஒன்று அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி நடத்தியது. இதில் வென்ற ஊழியருக்கு சம்பளத்துடன் 365 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
தனது ஊழியர்களுக்கு முழு ஆண்டு விடுமுறை அளிக்க நினைத்த முதல் நிறுவனம் இதுவல்ல என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2022ஆம் ஆண்டில் இதே போன்று ஒரு ஊழியருக்கு ஜாக்பாட்டை மற்றொரு ஷென்சென் நிறுவனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.