ஒடிசா ரயில் விபத்தைக் காரணமாக வைத்து பொதுமக்களிடம் விமானக் கட்டணம் அதிகமாக வசூலிக்கக் கூடாது என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமான நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ”ஒடிசாவில் நிகழ்ந்திருக்கும் துரதிஷ்டவசமான ரயில் விபத்தைக் காரணம் காட்டி, புவனேஸ்வர் மற்றும் மாநிலத்தின் மற்ற விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படிக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ரயில் விபத்து சம்பவத்தால் விமான சேவை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ எந்தவித கூடுதல் கட்டணத்தையும் பயணிகளிடம் இருந்து விமான நிலையங்கள் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலாசோர் பகுதியில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துப் பகுதியை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அரசு வழங்கும். இந்த விபத்து குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.