கவுன்சிலிங் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, என்.எம்.சியின் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் உள்ள 250 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது. என்.எம்.சியிடம் இருந்து அங்கீகாரம் பெறாததால் சீட் மேட்ரிக்ஸில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
அதே போல் திருவள்ளூரில் உள்ள வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட 150 மாணவர் சேர்க்கைகான இடங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த கல்லூரிக்கு 2022-2023-ம் ஆண்டிற்கான 100 இடங்களைப் புதுப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் 2023-24 கல்வியாண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்குப் பதிலாக கவனக்குறைவாக 150 எம்பிபிஎஸ் இடங்களுக்குப் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங் ஹெல்ப்லைன் மைய அதிகாரிகள் கூறுகையில், கல்லூரியில் சேர்க்கையை நிறுத்துவது தொடர்பாக என்.எம்.சியிடமிருந்து எழுத்துப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், மருத்துவ ஆணையத்திடமிருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்குகிறோம். இது தொடர்பான மேலும் தகவல்களைப் பெற மருத்துவ ஆலோசனைக் குழு மற்றும் கல்லூரியை பெற்றோர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற மாணவரின் பெற்றோர் கூறுகையில், “கல்லூரியில் சேருவதற்கும், கட்டணம் செலுத்துவதற்கும் ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசித் தேதியாகும். நாங்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்கள் சேர்க்கையை அங்கீகரிக்கவில்லை என்றால், நாங்கள் கட்டணமாக செலுத்திய ரூ.25 லட்சம் என்னவாகும் என்று தெரியவில்லை. மேலும் இப்போது சேர்க்கப்படவில்லை என்றால் அடுத்த சுற்றுகளில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை” என்று கூறினார்.