இந்தியாவில் கடந்தாண்டு பாதி வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்வதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் தானாக போக்குவரத்து செலவும் உயரும். இதுவே பணவீக்கத்திற்கும் ஒரு வகையில் காரணமாக அமைந்தது.
மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்பின் ஒன்றரை வருடமாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில்தான் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்குமாறு கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பெரிதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை 140 டாலரில் இருந்து 72 டாலராக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல்-டீசல் விலை குறையவில்லை.
இந்நிலையில், மக்கள் நலன் கருதி இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை குறைக்கும் படி கோரிக்கை வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, இந்தாண்டு தெலங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்கிடையே, கடந்த 1ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மற்றொரு பக்கம் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.1,118.50-க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் அதாவது 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள் வர உள்ளதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.