தன் மீது இருந்த ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் திரைப்பட பாணியில் கொடூரமாக, வெட்டி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள, திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓணான் செந்தில். இவர் மீது, பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில், இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, செந்தில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக தன்னுடைய வழக்கறிஞர்களான பாரதிராஜா, அகிலன் ஆகியோருடன் காரில் திருவாரூர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்த நிலையில் தான், விசாரணை முடிவடைந்த பிறகு, வழக்கறிஞர்கள், அகிலன், பாரதிராஜா உள்ளிட்டோருடன் காரில் கும்பகோணத்திற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவர்கள் வந்த கார், திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாகலூர் என்ற கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த காரை பின் தொடர்ந்து, ஒரு சிலர் வந்தனர். அப்போது அந்த மர்ம கும்பல் வந்த கார், ஓணான் செந்தில் வந்த காரின் மீது, உறசியதால், ஓணான் செந்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் பிறகு, சாலை ஓரத்தில் நின்ற காரில் இருந்து ஓணான் செந்தில் இறங்கி உள்ளார்.
அவர் காரில் இருந்து இறங்கியவுடன், அந்த கும்பல், பின்னால் இருந்து, அவரை சரமாரியாக வெட்டி உள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில், அவரை சரமாரியாக வெட்டி, படுகொலை செய்தது அந்த மர்ம கும்பல். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்த கும்பல் ஓணான் செந்திலின், வழக்கறிஞர்களான அகிலன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரையும், உடலில் பல்வேறு இடங்களில், வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு வந்து, உயிரிழந்த செந்திலின் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த, பாரதிராஜா, அகிலன் உள்ளிட்ட இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
அதன்பிறகு, காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷின் உத்தரவின் பெயரில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர், குற்றவாளிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். முன்விரோதம் காரணமாக, இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.