நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமண மோசடி புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் முதலில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். பின்னர் 7 முறை கருக்கலைப்பு செய்த புகாருக்காக விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனடிப்படையில் சீமானை போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான், போலீஸ் விசாரணைக்கு இரண்டு முறையும் ஆஜராகவில்லை. அவரின் வழக்கறிஞர்கள் மட்டுமே போலீசாரை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில், தான் தற்கொலை செய்து கொள்ள நேரிடும். தண்ணீர் கூட குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில், விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கும் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி சென்னை போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறார். அவரைப் பாதுகாக்க வேண்டும். விஜயலட்சுமிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயலட்சுமிக்கு 7 முறை சாப்பாட்டில் கருக்கலைப்பு மாத்திரையை சீமான் கலந்து கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் உதவி கமிஷனர் ஒருவர் தலையிட்டு வழக்கை திசை திருப்புகிறார். அவரது தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.