தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் வராதவர்கள் என்ன செய்ய வேண்டும் என மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இதற்குத் தீர்வாக முக்கிய நடவடிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
திமுக கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. அந்தவகையில், முக்கியமானது மகளிர் உரிமை தொகை. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்குத் தேர்தல் சமயத்திலேயே மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தது முதலே பலரும் இது குறித்தே கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், கடந்த செப்.15ஆம் தேதி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே இதில் பலருக்கும் உரிமைத்தொகை சென்று சேர்ந்தது. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு மாதம் 15ஆம் தேதி மகளிருக்கு உரிமைத்தொகை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை தொகை திட்டத்திற்குத் தமிழ்நாடு முழுக்க மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1.06 கோடி பேர் தேர்வாகினர். அதேநேரம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களில் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். எதற்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதே பலருக்கும் தெரியவில்லை. உரிமை தொகை பெற தாங்கள் தகுதியுள்ளவர்கள். இருப்பினும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என நினைக்கும் பெண்கள் இ-சேவை மையங்கள் மூலம் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். இந்த இணையதளத்திற்குச் சென்று பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைத் தர வேண்டும். பிறகு ஆதார் இணைக்கப்பட்ட எண்ணிற்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். பொதுமக்கள் பலரும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து குழப்பத்தில் இருந்த நிலையில், இந்த இணையதளம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.