காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா – இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் கூறியதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. கனட பிரதமரின் இந்த கருத்துக்கு இந்தியா தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. இதற்கிடையே இந்த மோதலின் அடுத்த கட்டமாகக் கனடா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியா முழுவதும் இருக்கும் பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டினர் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்.. அங்கே பாதுகாப்பு சார்ந்து சில கவலைகள் உள்ளன. அல்லது அந்த நிலைமை விரைவாக மாறக்கூடும். எல்லா நேரங்களிலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அங்குள்ள உள்ளூர் ஊடகங்களைத் தொடர்ந்து பாருங்கள்.. அதில் அதிகாரிகள் அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா அரசு தனது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. குடும்பம் அல்லது வணிகத் தேவைகளுக்கு இங்கே செல்ல வேண்டுமா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே அங்கு இருந்தால், நீங்கள் கண்டிப்பாக அங்கே இருக்க வேண்டுமா என்பதைச் சிந்தியுங்கள்.அங்கே இருக்கத் தேவையில்லை என்றால் உடனடியாக அங்கிருந்து வெளியேறலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் கனடா மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகக் கணிக்கவே முடியாத பாதுகாப்பு சூழல் நிலவுவதால் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும், பயங்கரவாதம், உள்நாட்டுக் கலவரம் மற்றும் கடத்தல் அச்சுறுத்தல் உள்ளதால் லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.