மாணவிகளுக்கு மாலை நேரத்தில் சீக்கிரமே வகுப்புகளை முடிக்க வேண்டும் என கோச்சிங் நிறுவனங்களுக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோச்சிங் நிறுவனங்கள் மாலையில் தாமதமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல், ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு, மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பயிற்சி நிறுவனங்களில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அரசின் அறிக்கையின்படி, பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 17 மாநகராட்சிகள் மற்றும் கவுதம் புத்த நகரின் 2,500 பள்ளிகள் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்காக மாநில அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 1,692 பள்ளிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பள்ளிகளில் பொருத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது