தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக விருதுநகா், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திருப்பூா் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.