சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன் (24). இவர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வருகிறார். இவர், ஒரு மாத காலமாக Say Hi என்ற ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். அந்த ஆஃப் மூலம் அகிலா என்ற பெண் அறிமுகமாகி குறுஞ்செய்தி அனுப்பி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தமோதர கண்ணனிடம் அகிலா தனக்கு 1,000 ரூபாய் பணம் அனுப்பினால் தன்னுடைய ஆபாச படத்தை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி தாமோதர கண்ணன் ரூ.1,000 ரூபாய் அனுப்பியுள்ளார் .
அந்த பெண் கூறியது போல் ஆபாச படம் அனுப்பாமல் ஏமாற்றியதால் தாமோதர கண்ணன், பணம் அனுப்பிய செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்னர் தமோதர கண்ணனை வேறொரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர்கள், தாங்கள் சைபர் கிரைம் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். அத்துடன் அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரிடம் நீங்கள் ஆபாசமாக பேசி படம் அனுப்புமாறு வற்புறுத்தியதால் அகிலா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
எனவே, அகிலா தற்கொலை நீங்கள் தான் காரணம் என மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி உங்கள் மீது வழக்குப் பதியாமல் இருக்க 60 ஆயிரம் ரூபாயை உடனே அனுப்புமாறு கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்து போன தாமோதர கண்ணன், என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் கூறிய எண்ணில் முதற்கட்டமாக 13 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர் தமோதர கண்ணன் அந்த நபர்களைத் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமோதர கண்ணன், வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை நடிகரிடம் ஆபாச படம் அனுப்புவதாக கூறி அடுத்தடுத்து பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.