மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ தகுதியற்றவர் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மக்களவையில் கடுமையாக விமர்சித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் டி.ஆர்.பாலு அவமதித்திருப்பதாக பாஜக குற்றம்சாட்டியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்: ஆ.ராசா (திமுக): தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய்: மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் உள்ள ரூ.2,013 கோடியை மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதி தொகுப்புக்கு மத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கியது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏன்? என டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அப்போது, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுந்து பேச முயன்றதால், டி.ஆர்.பாலு கோபமடைந்தார்.
டி.ஆர்.பாலு: என்ன சொல்ல வருகிறீர்கள். நான் பேசும்போது ஏன்குறுக்கிடுகிறீர்கள். பேசாமல் உட்காருங்கள். உங்களுக்கு என்ன வேண்டும். எம்.பி.யாக இருக்கவோ, அமைச்சராக இருக்கவோ உங்களுக்கு (எல்.முருகன்)தகுதி இல்லை. சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்: எங்களது அமைச்சர் தகுதிஅற்றவர் என்று நீங்கள் எப்படி கூறமுடியும். நீங்கள் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி: அமைச்சர் எல்.முருகன் தகுதியற்றவர் என்று நீங்கள் எப்படி கூறலாம். திமுக அரசு தகுதியற்ற அரசு. காங்கிரஸ் கட்சி தகுதியற்றது. ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு குற்றம்சாட்டி உள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்த தலித் சமூகத்தையும் அவர் அவமதித்துள்ளார் என்று வாதம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது, வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தம் இல்லாத அமைச்சரான எல்.முருகன் எழுந்து பதில் கூறினார். தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரியபோது, எங்கள் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் முருகன் செயல்பட்டார். தமிழகத்தை சேர்ந்த அவர், தமிழக நலனுக்கு எதிராக பேசினார்.
அதனால், சொந்த மாநிலத்துக்கு துரோகம் செய்கிறார் என்று குற்றம்சாட்டினோம். மேலும், ‘தகுதியற்றவர்’ என்ற வார்த்தை அநாகரிமானது அல்ல. தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது, ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதை கண்டித்து பிப்ரவரி 8-ம்தேதி (நாளை) நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.