சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வித்தியாசமான போனஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி ஆச்சரியமடைய செய்கிறது. அந்த வகையில் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவித்திருக்கும் போனஸ் அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருப்பதோடு வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. தென் கொரிய நாட்டில் இயங்கி வரும் ‘பூ யூங்’ என்ற கட்டுமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,383,936.36 வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் கூட்டத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு ரூ.8,383,936.36 /-($.101,000/-) வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் சேர்மன் லீ ஜூங்-கியூன் அறிவித்திருக்கிறார். தென்கொரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார சுமை காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிறப்பு விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இதனை சரி செய்து பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு இந்த போனஸ் சலுகையை அறிவித்திருப்பதாக லீ ஜூங்-கியூன் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குழந்தை பிறப்பிற்கான போனஸ் மூலம் நிறுவனத்தைச் சேர்ந்த 70 ஊழியர்கள் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையை பெற்றுள்ளனர். தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகையை அறிவித்திருக்கிறார். இதன் மூலம் புதிதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ஊழியர்களுக்கு ரூ.8,383,936.36 /- வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 70 ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர் திருமதி சாங் ஜியோங்-ஹியோன் ” குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கக்கூடிய பொருளாதார சுமைகளை நினைத்து குழந்தை பெறுவதை பற்றி கவலைப்பட்டதாக தெரிவித்தார். தற்போது தங்களது நிறுவனம் போனஸ் அறிவித்திருப்பதன் மூலம் இரண்டாவது குழந்தைக்கு திட்டமிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் 2023 ஆம் வருடத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 0.7 ஆக இருக்கிறது. இது கடந்த 20 வருடங்களில் கண்ட மிகப்பெரிய வீழ்ச்சி என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.