Tn government 2024: தமிழ் அறிஞர்களுக்கு திங்கள்தோறும் ரூ.4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் தமிழக அரசு.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500., மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் 4000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது.
தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித் தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல் தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ் காத்த தகைமைக்காக உதவித் தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் மரபுரிமையருக்கு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500 வழங்கப்படும்.
தமிழாய்ந்த தமிழ்மகனின் தமிழரசு தமிழ்த் தொண்டர்களைக் காக்கும் இப்பணியில் இதுகாறும் 1234 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மறைவிற்குப் பிறகு அவர்களின் மரபுரிமையர்கள் 70 பேருக்கு தற்போது உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2023-2024ஆம் ஆண்டிற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.
English Summary : Tn government 2024: Tamil Nadu government to provide Rs 4,000 assistance to Tamil scholars every Monday