பஞ்சபூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலையில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா மற்றும் தீபமும் ஏற்றப்பட்டு வந்தது. இந்த தீபத்திருவிழாவின் பத்தாவது நாளான இன்று கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மேலும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான,கோயிலின் பின்புறம் உள்ள இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலையில், சரியாக ஆறு மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. நேற்றைய தினம் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டிய நிலையிலும், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த கொப்பரையில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளால் திரி பயன்படுத்தி ஏற்றப்பட்டுள்ளது.